திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.97 சித்தத்தொகை - திருக்குறுந்தொகை |
சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வானிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே.
|
1 |
அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே.
|
2 |
ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதி பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.
|
3 |
இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே.
|
4 |
ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்
ணீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.
|
5 |
உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப்
பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம்
பிச்சை யேபுகு மாகிலம் வானவர்
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.
|
6 |
ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.
|
7 |
எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே.
|
8 |
ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலுந்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே.
|
9 |
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடிப் பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைபொள் பாம்பரை யார்த்த பரமனே.
|
10 |
ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.
|
11 |
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறுங்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.
|
12 |
ஒளவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே.
|
13 |
அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே.
|
14 |
கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க னாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.
|
15 |
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.
|
16 |
சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூவெயி லெய்தவ னல்லனே.
|
17 |
னுமனென் பான்சர கர்க்கு நமக்கெலாஞ்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.
|
18 |
இடப மேறியும் இல்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவர் ஐந்தலைப்
படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.
|
19 |
இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த உள்ளத் தவருணர் வார்களே.
|
20 |
தருமந் தான்றவந் தான்றவத் தால்வருங்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
|
21 |
நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.
|
22 |
பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே.
|
23 |
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே.
|
24 |
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்னையி னானெம் விகிர்தனே.
|
25 |
அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.
|
26 |
அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.
|
27 |
இளமை கைவிட் டகறலும் மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.
|
28 |
தன்னிற் றன்னை அறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை அறியிற் றலைப்படுந்
தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.
|
29 |
இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
|
30 |
திருச்சிற்றம்பலம் |